Friday, October 11, 2019

லட்சுமி குட்டி

செவியில் மட்டுமல்ல செவிட்டிலும் விழும் நல்ல கவிதை.

தோழர் கண்மணி ராசா சென்ற வாரம் தான் முகநூலில் லட்சுமி குட்டி pdf  வடிவில் வந்து விட்டாள் என்று பதிவிட்டிருந்தார்.
தோழரை அழைத்து கேட்ட மாத்திரத்தில் pdf அனுப்பி வைத்துவிட்டார்.
ஒரு பேருந்து பயணத்தில் லட்சுமி குட்டியை வாசித்து முடித்து விட்டேன்.
தோழர் கண்மணி ராசா தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர். ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட தோழர், தொழிலாளர் அமைப்புகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
பஞ்சாலை பணி என்றாலும் தம் உழைப்புக்கான நேரம் போக மீதத்தை தொழிலாளர் அமைப்புகளுக்காகவும், இலக்கிய அமைப்பிற்காகவும் ஒதுக்கி சிறப்பாக இயங்கி வருகிறார்.
லட்சுமி குட்டி என்ற ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை நம் கரங்களுக்கு தந்திருக்கிறார்.

தான் வாழும் சாதாரண பாட்டாளி மனிதர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் தோழர்
"உணவருந்தும் உதவிகள் செய்யும் வரவேற்கும் வழியனுப்பும் ஆசீர்வதிக்கும் அரவணைக்கும் கைகுலுக்கும் கவிதைகள் எழுதும்
வரிசையாய் சொல்லிய ஆசிரியர் கேட்டார் வலதுகை வேறென்ன செய்யும் ? வகுப்பறையே மெளனமாய் யோசிக்க
சோற் சிறுவன் சொல்வான்
மலம் அள்ளும்"
என்று சமூகம் சார்ந்த என்ன மணப்பாடுகளை லட்சுமி குட்டியை கூட்டி வந்து பேசியிருக்கிறார்.
வறுமையின் கொடுமையை, விரக்தி தரும் வெறுமையை, பாட்டாளியின் ஓலத்தை
"சாணிப்பால் முற்றத்தில் தினக்காயும் இரவொளியில்
உன்னோடு கவிதை பேச ஆசை

பகலெல்லாம் பாரவண்டி இழுத்த களைப்பில் நானும்
, தீப்பெட்டி ஆபிசில் தீயாய் பறந்த களைப்பில் நீயும்
, கண்ணயர்ந்து உறங்குகையில் கவிதையாவது ? கழுதையாவது"
என்று தன்னோடு வாழும் சக மனிதர்களின் இதயங்களுக்குள் இருந்து உரக்க குரல் எடுத்து பேசுகிறார்.
குழந்தைகளின் உலகம் அலாதியானது.
அந்த தனித்த உலகத்தை
"சத்தமிட்டபடியே சாலையில் போகும் வாகனங்களை நோக்கி உதடுகள் குவித்து " உஷ் " என்கிறாள் லட்சுமிக்குட்டி
அவள் மடியில் உறங்கிக் கொண்டிருந்தது குரங்குப் பொம்மை"
என்று சித்திரமாய் லட்சுமி குட்டியின் வழி வெளிப்படுத்தியிருக்கிறார்.
சமூக போராட்டத்தை பேசும் அதே குறளோடு
"நான் காவேரி ஆறு
நீ கரையோர வீடு
என்றேனும் ஓர் நாள் இழுத்துச் செல்வேன்
என்னோடு உன்னை" என்று  அழகிய காதல் மொழியும் பேசுகிறார். லட்சுமி குட்டியில் இடம்பெற்றிருக்கும் 2 ,3 நாட்டுப்புற பாடல்கள், அவர் மண்சார்ந்த வாசனையை நமக்கு நுகரத் தருகிறது.
மொத்தத்தில், லக்ஷ்மி குட்டி (அழைத்து முத்தமிடக் கூடியச்  செல்லக்குழந்தை)
வாழ்த்துக்கள் தோழர். , Edit box

Saturday, June 1, 2019

அந்தப் பெரு நாள் எங்கே

அந்தப் பெருநாள் எங்கே?

ரமலான் மாதம் வந்து விட்டால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை இருக்கும். குடும்ப பெண்கள் எல்லாம் நோன்புக் கஞ்சி, உணவு, பலகாரம் என்று தயாராகிவிடுவார்கள். வீட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் நோன்பை எதிர்கொள்வதற்கு பொருளாதார தேடலில் ஈடுபட்டு விடுவார்கள்.
எங்களுக்கோ பெருநாள் அன்னைக்கும் அடுத்த நாளும் தெருவில் நிகழ்ச்சி நடத்துவது தான் அந்த ஆண்டில் பெரும் லட்சியமாக இருக்கும்.

அரும்பு மீசை கூட முளைக்காத பருவம் அது. நண்டு, சுண்டு, நட்டுவாக்காலி போல நாங்க பத்து பதினைந்து பேர்.
அல்தீன் நண்பர்கள் என்பது எங்கள் இயக்கத்தின் பெயர்.
தைக்காத் தெரு பசங்க தீனுல் இஸ்லாம் என்ற பெயரில் நண்பர்கள் இயக்கம் ஒன்றை வைத்திருந்தார்கள்.
நடுத்தெரு பசங்களுக்கும் தைக்கா தெரு பசங்களுக்கும் தான் நிகழ்ச்சி நடத்துவதில் போட்டி.
ரமலான் நோன்பு தொடங்கியதில் இருந்தே நிகழ்ச்சி குறித்த திட்டங்களும் உரையாடல்களும் தினசரி நடக்கும். தெருவில் இறங்கி வீடுவீடாக வசூல் வேட்டை செய்வோம். நோன்பு தொடங்கி இரண்டு நாள் தான் ஆச்சு அதுக்குள்ள வந்திடுவானுவோ! போயிட்டு பொறவு வாங்கல! என்று திண்ணையில் நிற்கும் எங்களை வீட்டில் இருந்த பெத்தா அடிச்சு துரத்துவாள்.
தினசரி நோன்புக் கஞ்சி குடிச்சுட்டு தெருவில் இறங்கி விடுவோம். எங்க ஓத்திரம் தாங்காமல் 20, 50, 100,  என்று வீட்டுக்கு வீடு தருவாங்க.
ஊரில் உள்ள சில வியாபாரஸ்தர்களைப் பார்த்தால் அதிகபட்சம் தலா 500 கிடைக்கும். முதல் வார கலெக்ஷனை எடுத்துக்கொண்டு முதல் சனிக்கிழமை
நாகர் கோவிலுக்குப் போவோம். கலர் கொடி, டொயின் நூல், போஸ்டர் பசை, பெவிக்கால் எல்லாம் வாங்கிட்டு வந்து, அடுத்த நாளே கொடி ஒட்ட தொடங்கிடுவோம்.

நூல் கண்டை 2 மரத்துக்கும் கட்டி, அகலமான கலர் சீட்டை அளவெடுத்தது போல் வெட்டி மடக்கி, செங்கல் கூட்டி அடுப்பு வச்சி, யார் வீட்டிலாவது போய் பழைய அலுமினிய பானை ஒன்று வாங்கி வந்து கொடி ஒட்ட பசை காட்சுவோம்.
பின்பு முறுக்கேறி இருக்கும் நூலுக்கு மெழுகு தடவி வெயிலில் உலர்த்தி, பச்சை, சிகப்பு, ஆரஞ்சு, நீலம், ரோஸ், மஞ்சை, வெள்ளை என்று ஒன்றை அடுத்து ஒன்றாக நூலில் கொடிகளை ஒட்டுவோம். அது மாலை வரை வெயிலில் காயும். பிறகு தறிச்சுத்தும் நூல் கூட்டில் நூலுக்கும், கொடிக்கும் ஆபத்து வந்திடாதபடி மெதுவாக சுற்றி பத்திரப் படுத்துவோம்.

அடுத்த வேலை உடனே ஸ்பீக்கர் செட் மணி அண்ணனை பார்த்து புக்கிங் பண்ணனும். லேட்டாச்சுன்னா தைக்கா தெரு பயலுவோ புக் பண்ணிடுவானுவோ.
பெருநாள் முடியறதுக்குள்ள ஏழெட்டு வாட்டி மணி அண்ணன் வீட்டுக்கு நடப்போம்.
அவரு இரண்டு பக்க ஆர்டரையும் ஒன்னுச்சி எடுத்துட்டு சமாளிப்பாரு.
பிறகு விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடு செய்யனும், பரிசுக்கு உபயம் தேடணும், நோட்டீசு வால்ப் போஸ்டர் உபயம் தேடனும்.
ஊர்ல இருந்து யாரெல்லாம் நாகர்கோவிலில் கடை வச்சி இருக்காங்களோ அவர்களை ராத்திரி 10 மணி வரை காத்திருந்து, புடிச்சி உபயம் கேட்போம்.
முதலில் மறுப்பதும் பிறகு நம்ம புள்ளைங்கலா,  நம்ம செய்யாமல் வேறு யார் செய்யப் போறா என்ற மனதோடு ஒப்புக்கொண்டு உபயம் செய்வதும். துணிக்கடையில் வேலை பார்த்த காக்காமார்கள் தங்கள் ஓனரிடம் பேசி உபயம் வாங்கித் தருவதும், அப்பப்பா! பணம் திரட்ட போதும் போதும்னு ஆயிடும்.

நிகழ்ச்சி முடிவானதும்  எங்க தெரு  முகப்பில் இருக்கும் பெரிய சுவற்றில், நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை  வெள்ளை அடிச்சி நீலம் வச்சி எழுதுவோம். அது இரண்டு நாள் இரவுக் கொண்டாட்டமாக இருக்கும்.

அடுத்தது கடைசி வரும் சனி ஞாயிறு, சீரியல் லைட் போட முள் மரமும், தெருவில் டியூப்லைட் கெட்ட களக் கம்பும் ரெடி பண்ணனும். இன்னைக்கு கூலிக்கு ஆள் விட்டால்கூட அந்த முள் மரத்தை தோளில் தூக்கி வைத்து சுமந்து வர மாட்டாங்க. அன்னைக்கோட முள்ளும் கள்ளியுமா பாத்து வெட்டி சுமந்து தெருவுக்கு கொண்டு வருவோம்.
தெருவில் கிழக்கிலிருந்து மேற்கு வரை ரெண்டு பக்கமும் களக்கம்பு நாட்ட பள்ளம் தோண்டனும்.
அதேசமயம் நாகர்கோவில் பகுதியில் கடை வைத்திருக்கும் முஸ்லிம் வியாபாரிகளைப் பார்த்து ரமலான் கலெக்ஷன் கேட்கணும். எல்லாம் நோன்பு வைத்துக் கொண்டு தான் செய்வோம்.

அப்படி இப்படின்னு பெருநாள் நெருங்கி வரும்.
ஊர் ஆலிம்சா, ஜமாஅத் தலைவர், இன்னும் தெருவில் உள்ள ஒரு ஆளு, இதுபோக வெளியூரிலிருந்து ஒரு ஆலிம்சா,
வரவேற்புரை நீ, நன்றி உரை நான், நிகழ்ச்சி தொகுப்பு அவன் என்று எல்லா ஆலோசனைகளும் சட்டாம்பிள்ளை வீட்டு திண்ணையில் தான் நடந்து முடிவாகும்.
பந்தலுக்கு துறை அண்ணன் கிட்ட சொல்லனும், ஆர்ச்சி போடணும், மிட்டாய் கம்பெனியிலிருந்து தலைச்சுமையாக 40 பெஞ்சுகளும் சில நூறு சேர்களும் நடுத்தெருவுக்கு வந்து சேரும்.
பெருநாள் நாளைக்கா? நாளக்கழிச்சா? தெரியாது. அதனால ரெண்டு நாளைக்கு முன்னாலேயே மணி அண்ணே, ஸ்பீக்கர் லைட் எல்லாம்  கட்டி போட்டிடுவார்.
பள்ளியில் பெருநாள் அறிவித்ததும் எங்களுக்கு கை கால் ஓடாது.
மணி அண்ணன் வீட்டுக்கு தலைதெறிக்க ஓடுவோம். அவர் வந்து லைட்டைப் போட்டு இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்று நாகூர் ஹனிபாவை பாட விடுவார்.
நாளைக்கு பெருநாள். இன்னைக்கு நைட் தெருவுல பைப்பில் தண்ணி வரும் எங்க அக்கா மைலாஞ்சி பறிச்சிக் கேட்டா, பறிச்சி கொடுத்திட்டு வந்திடுறேன், பெருனா சமையல் சாதனங்கள் எல்லாம் மூர்த்தி கடையிலும் போஸ் காக்கா கடையிலும் வாங்கிக் கொடுத்திட்டு வாரேனு பசங்க நாலா பக்கமும் சிதறி ஓடுவாங்க.
தெருவில இருக்கிற எல்லா ஸ்பீக்கரும் பாடுதா? எல்லா லைட்டும் எரியுதான்னு கிழக்கையும் மேற்கையும் 40 வாட்டி நடந்து செக் பண்ணுவோம். எல்லாரும் வேலை முடிஞ்சி ஒரு வழியா வந்து சேர ராத்திரி பத்தர, 11 ஆயிடும்.

ரெண்டு பக்கமும் வரிசையா ஓட்டு வீடுகள் ஏற்கனவே கட்டி வைத்திருக்கும். கொடிகளை நூல் பிடித்து இரண்டு பக்கமும் இழுத்து கட்டுவோம். எல்லா வீட்டு ஓட்டுக்கும் கொடி நூல் வந்திருக்கணும், இல்லைன்னா அது பெரும் பிரச்சனையாகி போகும்.
ஜொலிக்கும் சீரியல் லைட்டும் கலர்கலராய் அசையும்  கொடியும் காண  பேரழகாய் இருக்கும்.

அடுத்த நாள் காலைக்குத் தேவையான ஆட்டுக்கறி வாங்க, ராத்திரி இரண்டு மணிக்கெல்லாம் பெரியவங்க புறப்பட்டிடுவாங்க.
பள்ளித் தெருவில் சீனிக் காக்காவும், ஜின்னா வீதியில தோல் மீராசா காக்காவும், அவர் தம்பி முஸ்தபா சாஹிப்பும் நல்ல
கிடாவா அருப்பாங்க.
சில பசங்களுக்கு அதையும் குறித்த நேரத்தில் வாங்கி வீட்டுக்கு கொடுக்கணும்.
இப்படி விடிய விடிய முளிப்பு தான்.

லே நம்மோ தொழுதுட்டு வந்ததும் விளையாட்டுப் போட்டியை தொடங்கிடனும், மைக்கில கொஞ்ச நேரத்துக்கு ஒரக்க நீ சொல்லிட்டே இருக்கணும் என்று பேசிக்கொள்வோம்.
இரண்டு தெருக்களிலும் போட்டி போட்டுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவோம்.
எங்கள் அல்தீன் நண்பர்கள் நடத்தும் வடம் இழுத்தல் போட்டி மிகப் பிரபலம்.
திருமணம் ஆனவர்கள் ஒரு பக்கம் ஆகாதவர்கள் ஒரு பக்கம்.
பலே போட்டியை பார்க்க வீடுகள் தோறும் பெண்கள் கூட்டம் இருக்கும். உறியடி, கபடி என்று பெரியவர்களுக்கான போட்டியும் உண்டு. சமயம் சார்ந்த போட்டிகள், வினாடி வினா, வார்த்தை விளையாட்டு என்று நான் நடத்தும் போட்டிகளும் நிறைய இருக்கும்.
அதிகபட்சமாக ஒரு முறை எங்கள் தெருவுக்கு வசூலுக்கு வந்த யானை பாகனிடம் பேசி, ஒரு பக்கம் யானையும் மறுபக்கம் மக்களும் என வடம் இழுக்கும் போட்டி நடந்தது.
மாலை நேர போட்டியை காண தெரு முழுவதும் ஜே ஜே என கூட்டம் நிரம்பி வழியும்.

இரவில் மார்க்கப் பேருரையும் பரிசளிப்பும்.
அழைத்துவந்த சிறப்பு பேச்சாளர் பேசத் தொடங்கும் முன்பே முந்தைய நாள் இரவு முழுவதும் முழிப்பு, பகல் முழுவதும் விளையாட்டு, பலநாள் களைப்பு எல்லாம் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தும் நண்பர்கள் அங்கங்கே திண்ணைகளில் படுத்துறங்க தொடங்கிடுவோம்.
ஒரு வழியா நிகழ்ச்சி முடிஞ்சு எல்லாரையும் அனுப்பி, சேர் எல்லாம் மடக்கி ஒதுக்கிட்டு, மணி அண்ணே ஸ்பீக்கர் லைட் எல்லாம் களத்திட்டுப் போகும்போது நெஞ்சில் ஏதோ ஒரு பிரிவுத் துயர் இருக்கும்.

அப்படி ஒரு மாதம் கொண்டாடிய நோன்புப் பெருநாள்! இப்போது எங்கே?

முகநூலில் முகமம் சொல்லியும்,
வாட்ஸ்சப்பில் வாழ்த்து சொல்லியும்
கழிகிறது இன்றைய பெருநாட்கள்.

  சுழலும் நினைவலையில்
முஹம்மது அஸ்கர்
அல்தீன் நண்பர்கள் இயக்கம்
நடுத்தெரு
ஆளூர்
கன்னியாகுமரி மாவட்டம்.

Tuesday, August 21, 2018

பெருநாள் தோசையும் கிடாக் கரியும்.

*** பெருநாள் தோசையும்- கிடாக் கறியும்.***

     கொண்டாட்டங்கள் கூட சம்பரதாயம் ஆகிவிட்டன.
புத்தாடை துவங்கி பிரியாணி வரை,அனைத்தும் ஆன்லைன் ஆர்டரில் வீட்டுக்கு வந்து விடுகிறது.

வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, தூங்கி முழிச்சா பெருநாளும் முடிந்துவிடுகிறது.

கூடி சமைச்சி, ஒண்ணா திண்ண நினைவுகள் கூட
ஆழ்மனதில் புதைந்து காணாமல் போகிறது..

    இப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் வைக்கும் விருந்துகளில் ' பரோட்டா ' தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது.

கல்யாண பந்தி துவங்கி,- மையத்து வீடு வரை_ அனைத்து விருந்துகளிலும் பரோட்டா இருக்கிறது.

பரோட்டா கறி இல்லாத பெருநாளை நினைச்சுப் பார்க்கவே கஷ்டமாதான் இருக்கிறது.

    70தை கடந்த உப்பாவும், உம்மம்மாவும்
அன்றைய பெருநாளை சிலாகித்துச் சொல்வார்கள்.

    " அன்னைக்கு எல்லாம் இப்படியா?

பெருநாளுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலேயே,
நெல்லு அவிச்சி குத்தி, மாவு இடிச்சி வறுத்து ரெடியாயிடும்.

வீட்டுல வருஷத்துக்கு 2, பெருநாளுக்கு தான் ' தோசை சுடுவோம். '

பெருநாளுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலேயே
தோசைக்கு ஊற வச்சு, முந்தின நாளு, ஊட்டுல உள்ள பொம்பளையளும் கொமரி புள்ளையளும்,
மாவாட்டி எடுப்பாங்க.

சின்ன புள்ளைங்க எல்லாம்
நிக்கர் பாக்கெட்டில பூராவும், ஊற வெச்ச அரிசியை அள்ளி போட்டு தின்னுகிட்டு திரிவாங்க.

நாளைக்கு பெருநாளைக்கு எங்க வீட்ல ' தோசையாக்கும் ' என்று ஒருவருக்கு ஒருவர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.

ராத்திரி உறக்கத்தில் கூட கனவுல தோசை வரும்.

தோசை திங்க அவ்வளவு ஆவலோடு எதிர்பார்த்து இருந்த காலம் அது.

காலைல 3,மணிக்கெல்லாம் கிடா அறுத்து, வாப்பா கறி வாங்கிட்டு வந்துரும்.

காலைல 6, மணிக்கு சிறுசு, பெருசு எல்லாம் அடுப்பங்கரையில் கூடிக் கிடக்கும்.

ஒரு வீட்டுல தோசை சுட்டால், 4, வீட்டுக்கு மணக்கும்.
காலைல கெடா கறி கொதிக்கும்போது,
கொடலு குல்ஹுவல்லாஹு ஓதீரும்.

காலையில பெருநாள் தொழுது, வீட்டுக்கு வந்து, மக்க புள்ள எல்லாம் ஒன்னுச்சி இருந்து,
கறி குழம்பு ஊத்தி தோசையை பெசஞ்சு திம்போம்.

ஒவ்வொரு தோசையும் ஒரு இஞ்சி வண்ணத்துக்கு இருக்கும்.

சில ஆட்கோ எல்லாம் 6,தோசை
திண்பார்கள்.

மத்தியானத்துக்கு___
நெச்சோறு, கிடாக் கறி, பருப்பு, பப்படம் வச்சி வயறு முட்ட சாப்பாடு.

ராத்திரிக்கு___
சோறு அல்லது புட்டும் கறி குழம்பும்.

ஆக்கின மனம் நாள்பூரா நிக்கும்,
ருசி இரண்டு நாளைக்கு நாக்குல இருக்கும்.

பெருநாளுக்கு தோசை தின்ன சந்தோசம் ஒரு வாரம் மனசுலயே கிடக்கும்.

ஹஜ் பெருநாளா இருந்தா,
ஒரு வாரத்துக்கு குர்பானி கறியோடு சாப்பாடு கழியும். ".

    அடுத்து தோசையும் கறியும் திங்கணும்னு அடுத்த பெருநாளை
எதிர்பார்த்துட்டு இருப்போம். "
என்று தங்களின் இளமை கால பெருநாள் மகிழ்ச்சியை பேரானந்தத்தோடு சொல்லி முடிக்கிறார்கள்.

    பெருநாளைக்கு மட்டுமே தோசை சாப்பிடும் அளவிற்கு, வறுமை குடிகொண்டிருந்த இஸ்லாமியர்களைதான், " தின்னு கெட்ட துலுக்க பயலுவோ " என்று பட்டம் கட்டி அழைக்கும் அளவிற்கு, இஸ்லாமியர்களின் உணவுக் கலாச்சாரம் மாறி இருக்கிறது.

    நன்றாக உழைக்கிறோம், நன்றாகச் சாப்பிடுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?

தவறு ஒன்றும் இல்லை. ஆனால் தோசை சாப்பிட்ட மகிழ்ச்சியை,
பரோட்டா, இடியாப்பம், பாலாடை, கிடாக் கறி- மற்றும் கோழிக்கறி
நிறைந்திருக்கும் தட்டுகளில் பார்க்க முடிவதில்லை.

   •சரி சரி. நாளைக்கு ஹஜ் பெருநாள், பேச்சுவாக்கில் மறந்துட்டேன்.
  ( ஹலோ, அகமது ஷா மச்சான்,
நாளைக்கு பெருநாளைக்கு எங்க வீட்டுக்கு, 25, புரோட்டா வேணும். ஆடர் எழுதிக்கோங்க '
) ( ஹலோ, மாப்ள கபீர், பெருநாளுக்கு நல்ல
கிடா கரியா பாத்து 2, கிலோ போட்டுவை. அப்படியே 2, கிலோ சிக்கன் வேணும் ' '

  ) என்ன பாக்குறீங்க!
உங்களைப் போலதான் நானும்.

" ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களுடன்
பேராசிரியர்
முஹம்மது அஸ்கர்."

Saturday, August 18, 2018

தாறிக் இலாகி.

***  இஸ்லாமிய மன்னரும் சூரிய காலண்டரும். ***

     இஸ்லாமியர்கள் சந்திரக் காலண்டர்களை பின்பற்றியே மாதங்களை முடிவு செய்கின்றனர்.
மாதத்தின் துவக்கம், பண்டிகைகள், திருமணம் போன்ற விழாக்கள் அனைத்தும் சந்திர காலண்டர்களை பின்பற்றியே செய்கின்றனர்.

    நபி முஹம்மத் அவர்களின் மறைவிற்குப் பிறகு, உருவாக்கப்பட்ட ஹிஜ்ரி ஆண்டு இஸ்லாமிய ஆண்டாக கணக்கிடப்பட்டு வருகிறது.

    இஸ்லாம் அல்லாத உலகின் பல சமூகத்தவரும் சூரிய நாட்காட்டியை பின்பற்றி வருகின்றனர்.
குறிப்பாக இந்து மரபில் சூரிய காலண்டருக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதைக் காணலாம்.

    இந்தியாவின் இருபெரும் சாம்ராஜ்ஜியங்களை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களான
" முகலாய மன்னர் அக்பர் மற்றும் இஸ்லாமிய மன்னர் திப்பு சுல்தான் " ஆகிய இரு மன்னர்களும், தங்கள் ஆட்சியில்
" சந்திர நாட்காட்டிகளை " பின்பற்றி இருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் காண முடிகிறது.

   ( தாரிக் இலாஹி. )
இந்தியாவை ஆண்ட முகலாய சாம்ராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற அரசர் அக்பர்.

அவர் பல மத கோட்பாடுகளை உள்ளடக்கிய
" தீன் இலாஹி " என்னும் சமய நெறியை தோற்றுவித்தார்.
அம் மன்னரால் உருவாக்கப்பட்டதுதான்
" தாரிக் இலாஹி " என்னும் சூரிய காலண்டர்.

  ( மௌலூது ஆண்டு. )
   இந்தியாவின் தென் பகுதியில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்த, மாமன்னர் திப்பு சுல்தான் " மௌலூது ஆண்டு " என்ற சூரிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார்.

    தக்கலை ஹலிமா எழுதிய
" மக்குளு " நூலில், திப்பு சுல்தானின் நாணயமும், அதில் அரபு ஆண்டுடன் " மௌலூது ஆண்டும் " இடம்பெற்றிருப்பதை பதிவு செய்துள்ளார்.

    இஸ்லாமிய பின்புலத்தில் இருந்து வந்த மன்னர்கள், சந்திர காலண்டர்களை புறக்கணித்து சூரிய காலண்டர்களை உருவாக்க என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து விளக்கமளிக்கும் வரலாற்று ஆய்வாளர் " பழங்காசு சீனிவாசன் " அவர்கள்,
இந்தியாவில் வரி வசூல் செய்வதற்காகவே இஸ்லாமிய மன்னர்கள் " சந்திரக் காலண்டர்களை " உருவாக்கி இருக்க வேண்டும்.

அரபு ஆண்டினை இந்திய ஆண்டோடு ஒப்பிட்டால், " ஆண்டுக்கு 11, நாட்கள் " குறையும்.
    பல ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது, சில மாதங்களுக்கான வரி இழப்பு அரசுக்கு ஏற்படும்.
எனவே அறுவடை காலத்தை கருத்தில் கொண்டு, இஸ்லாமிய மன்னர்கள் சூரிய நாட்காட்டிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள், என்று விளக்குகிறார்.

    இரு சூரிய காலண்டர்களும், அவர்கள் காலத்திற்குப் பிறகு நடைமுறையில் இருந்ததாக குறிப்பு எதுவும் தென்படவில்லை.

" வேர்களைத்தேடிய பயணத்தில் "
பேராசிரியர் முஹம்மது அஸ்கர்.

Sunday, August 12, 2018

வரலாற்றுக் காலத்தில் 3D தறைத் தழம்.

*** வரலாற்றுக் காலத்தில் 3d தரைத்தளம்.***

    டிஜிட்டல் தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் வளர்ச்சி பெற்று இருப்பதைப் போன்றே கட்டுமானத் துறையிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறது.
தற்போது பிரம்மாண்டமாக கட்டப்படும் கட்டிடங்களில் பிரமிக்கச் செய்யும் " 3d " தரைத்தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக, ஆளூர் பகுதியில் இயங்கி வரும் " ரயான் construction " நிறுவனத்தின் கட்டுமானப் பொறியாளர், நண்பர் முஹம்மது ரிஸ்வான் அவர்கள்
" epoxy " உயர்ரக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3d தரை தளங்களை அமைத்துக் கொடுக்கிறார்.
கடந்த 5, ஆண்டுகளாக பிரபலமாகி வரும் 3d, தரைத்தள அமைப்பிற்கு மிகப்பெரும் வரலாறு உண்டு.

    நாம் நினைப்பது போன்று 3d, தரை அமைப்பு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. வரலாற்றுக் காலத்திலேயே இது போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிகிறது.

    இஸ்லாமிய வரலாற்றில் சுலைமான் நபி அவர்களின் பிரம்மாண்டமான மாளிகை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.
சுலைமான் நபி, சபா நாட்டை ஆண்ட இளவரசியான பல்கீஸ் அம்மையாரை தம்மைச் சந்திக்க வரும்படி அழைப்பு விடுக்கிறார். சுலைமான் நபியின் அடிமைகள் பல்கீஸ் அம்மையாரின் கால் பாதங்கள் கழுதையின் பாதத்தை போன்று இருக்கும் என்று கூறுகிறார்கள். பேரழகியான பல்கீஸ் அம்மையாரின் பாதத்தை பற்றி அறிந்துகொள்ள சுலைமான் நபி புதிய ஏற்பாடு ஒன்றை செய்தார்கள்.

    தனது மாளிகையின் முன்பகுதியில் குளம் ஒன்றை வெட்டி, அதில் நீர் நிரப்பி மீன்களை விட்டு, அதன் மீது தரைத் தளம் ஒன்றை அமைத்தார்.
பல்கீஸ் அம்மையார் சுலைமான் நபியின் மாளிகைக்குள் நுழைந்ததும், " தண்ணீர் இருப்பதாக நினைத்து, ஆடை தண்ணீரில் நனைந்து விடாமல் இருக்க தன் இரு கைகளால் தம் கணுக்கால் அளவிற்கு ஆடையை தூக்கிப் பிடித்தார். "
பின்பு அது தண்ணீர் இல்லை, தரை என்பதை உணர்ந்து கொண்டார். என்று அந்த குறிப்பு சொல்கிறது.

    கிபி. நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் " மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் " மேற்குறிப்பிட்ட செய்தி போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

    பாண்டவர்கள் வேள்வி நடத்துவதற்காக பிரம்மாண்டமான மாளிகை ஒன்றை எழுப்பினர். அந்த மாளிகையை சுற்றிப் பார்த்த துரியோதனன், ஒரு இடத்தில்
" தரையில் தண்ணீர் இருப்பதை போன்று உணர்ந்து, தம் வேட்டியை முழங்கால் அளவிற்கு தூக்கிப் பிடித்து நடந்தான். ஆனால் அங்கு தண்ணீர் இல்லை.
மற்றோர் இடத்திலும் தண்ணீர் இருப்பது போல தோன்றவே, அது தரை அமைப்பு எனக்கருதி நடந்தான். உண்மையில் அங்கு தண்ணீர் இருக்க, துரியோதனன் வழுக்கி விழுந்தான். என்பதாக அந்தக் காட்சி இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

    மேற்குறிப்பிட்ட செய்திகள்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுவதை போன்ற 3d, தரைத்தளங்கள் வரலாற்றுக் காலத்திலேயே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

வேர்களைத்தேடி
பேராசிரியர் முஹம்மது அஸ்கர்.